செந்தமிழ்சிற்பிகள்

ஔவை துரைசாமி (1903 - 1981)

ஔவை துரைசாமி (1903 - 1981)

அறிமுகம்

பிறப்பு செப்டம்பர் 5, 1903 ஔவையார் குப்பம்,விழுப்புரம் மாவட்டம், இறப்பு 3 ஏப்ரல் 1981 (அகவை 77) மதுரை,தமிழ்நாடு.

தமிழறிஞர் ,கலைமாமணி விருது பெற்றவர். தமிழ் மொழி மேலிருந்த பற்றுதலின் காரணமாகத் தான் பார்த்து வந்த உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் பணியில் இருந்து விலகி, அதன்பின் தமிழ் கற்று தமிழறிஞராக உயர்ந்த பெருமைக்குரியவர்.உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் திண்டிவனத்திலிருந்த அமெரிக்க ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில், பள்ளியிறுதி வகுப்புவரை பயின்று சிறப்பாகத் தேறினார். பின்பு, வேலூர் ஊரீசு கல்லூரியில் இடைநிலை வகுப்பில் சேர்ந்து பயின்றார். ஆனால் குடும்ப வறுமையினால் கல்வியைத் தொடர வாய்ப்பில்லாமல் போயிற்று. குடும்பத்திற்கு உதவ "உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர்" பணியில் சேர்ந்தார். அப்பணியில் தொடர மனம் இல்லாமல் ஆறே மாதத்தில் அப்பணியிலிருந்து விலகினார்.

பின்னர் கலவை, இராணிப்பேட்டை (காரை) தொடக்கப்பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாறினார். 1929 முதல் 1941 வரை காவேரிப்பாக்கம், செய்யாறு, செங்கம், போளூர் ஆகிய இடங்களில் உயர்நிலைப்பள்ளித் தமிழாரியராகப் பணிபுரிந்தார். தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச்செல்வி, செந்தமிழ் முதலிய இதழ்களில் தமிழ் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார். 1942 இல் திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்ந்தார். 1943 முதல் எட்டு ஆண்டுகளுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையில், விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1951 இல் மதுரை தியாகராசர் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார்.



  எழுதி வெளியான நூல்கள் சில 

1.சேரமன்னர் வரலாறு

2.திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை

3.திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை

4.ஐங்குறுநூறு உரை

5.புறநானூறு உரை (2 பகுதிகள்)

சங்க இலக்கியங்களுக்கு உரை எழுதியவர்.இவரது வாழ்நாளின் முழுப் பெருமைக்கும் இது ஒன்றே சான்று.உரைவேந்தர், சித்தாந்த கலாநிதி போன்றவை இவருக்கு காலம் தந்த பட்டங்கள்.